Breaking News

விவசாயக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம்: கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் உட்பட இருவர் கைது

பொள்ளாச்சி, பிப்.19

விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.1.25 லட்சம் லஞ்சம் பெற்ற பொள்ளாச்சி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வராஜா, ஆனைமலை கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.



பொள்ளாச்சி அடுத்த தளவாய்பாளையம் கூட்டுறவு சொசைட்டியில் அந்த பகுதிகளை சேர்ந்த 200 விவசாயிகளுக்கு விவசாய பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடன் வழங்கப்பட்ட 200 விவசாயிகளில் 17 பேருக்கு சட்டத்திற்கு புறம்பாக கடன் வழங்கப்பட்டதாக அதே கால கட்டத்தில் புகார் இருந்துள்ளது. இந்த புகாரை கூட்டுறவு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்திரவிட்டுள்ளது. 


இந்நிலையில், பொள்ளாச்சி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வராஜா, தளவாய்பாளையம் கூட்டுறவு சொசைட்டி செயலாளர் சிவாஜியிடம் அந்த குறிப்பிட்ட 17 விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யமுடியாது, அதில் பிரச்சனை உள்ளது ஆகவே அதற்கு ரூ.1.25 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, தளவாய்பாளையம் கூட்டுறவு சொசைட்டியின் செயலாளர் சிவாஜி கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரை அனுகியுள்ளார். அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை கொண்டுசென்று பொள்ளாச்சி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வராஜா மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட ஆனைமலை கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். 

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் செல்வராஜா(45), ஆறுமுகம்(36) ஆகியோர் கைது செய்தனர்.

No comments

நன்றி | Thank You