Breaking News

இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் என்ற சாதனையை படைத்தார் ஜெயலலிதா

இனி யாருமே முறியடிக்க முடியாத வகையில், மொத்தம் 5 ஆயிரத்து 539 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்ததுள்ளார்.  இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் என்ற பெருமையை சாதனையை படைத்தார்  ஜெயலலிதா.


தமிழ்நாட்டில் அதிமுகவினரால் "அம்மா" என்று  அன்போடு அழைக்கப்பட்டுபவர் அம்மையார் ஜெயலலிதா. தனது கட்சியை இராணுவ கட்டுப்பாடோடும்  ஆட்சியை தமது வழக்கமான அதிரடியோடும் நடத்தியதால்தான்  தமிழ்நாட்டு மக்களால்  "இரும்பு மங்கை"யென போற்றப்பட்டார். அரசியல் எதிரிகளால் "தைரியசாலி" என ஏற்றுக்கொள்ளப்பட்டவர். 


அம்மா உணவகம்: 

உயர்தர உணவகங்களுக்குச் சென்று குடும்பத்தோடு விருந்து உண்ணும் வசதி படைத்தவர்கள் உள்ள நாட்டில் தான், இன்றும் தினமும் மூன்று வேளை உணவு உண்ண முடியாத ஏழைகள்  இருக்கின்றனர். 

இவர்களையெல்லாம் கருத்தில் கொண்டுதான் 2013 ஆம் ஆண்டு தனது பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி, அம்மா உணவகத்தை துவங்கினார் அம்மையார் ஜெயலலிதா.சென்னை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் தினமும் மூன்று வேளை உணவு விநியோகப்பபட்டது. 

முதலில் சென்னை மாநகராட்சியில் மட்டும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், ஏழை மக்கள் மத்தியில் மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் அமோக வரவேற்பு பெற்றது. இதையடுத்து கோவை, திருச்ச, சேலம் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கில் அம்மா உணவகங்கள்  திறக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

மேலும், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் தொடங்கி மத்தியப் பிரதேசம், டெல்லி வரை  செயல்படுத்தும் அளவிற்கு "அம்மா உணவகம்" திட்டம் தேசிய அளவில் முன்மாதிரி திட்டமாக திகழ்கிறது.


இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம்:

ஏழை,எளிய மக்கள் வசதிபடைத்தவர்களுக்கு இணையாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோக்கில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, 2010ஆம் ஆண்டு  மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தது. 


2011ஆம் ஆண்டு  ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தியது. அத்தோடு, இத்திட்டத்தின் நிர்வாக பொறுப்பை, தனியார் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

இத்திட்டமும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றதையடுத்து, இத்திட்டத்துக்கான  ஆண்டு காப்பீட்டு தொகையை தமிழக அரசு ரூ.5 லட்சமாக அண்மையில் உயர்த்தியது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  மத்திய அரசும், தேசிய அளவிலான மருத்துவ காப்பீடு திட்டத்தை  ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. அம்மா உணவகம் போன்றே  தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டமும் இந்திய அளவில் முன்மாதிரி திட்டமாக விளங்குகிறது.

மழைநீர் சேகரிப்பு திட்டம்: 

சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.  குறிப்பாக, கோடை களங்களில் நகரங்கள்  முழுதும்  குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடும் .  சென்னை மாநகரில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்கும் விதத்தில், கடலூர்  மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் விநியோகிக்கும் வீராணம் கூட்டு குடிநீர் திட்டம் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.இப்படியாக பிற இடங்களிலிருந்து  சென்னைக்கு தண்ணீர் கொண்டு வந்தாலும், மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீரைமட்டத்தை உயர்த்தினால்தான், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று அம்மையார் ஜெயலலிதா திட்டவட்டமாக கருதினார்.

அதன் பலனாக அவர், 2011ஆம் ஆண்டு மீ்ண்டும்  முதல்வர் பொறுப்பை ஏற்றதும், சென்னை மட்டுமின்றி தமிழகம்  முழுவதும் அனைத்து குடியிருப்புகள், கட்டடங்களில் மழைநீர்  சேகரிப்பு திட்டம் அதிரடியாக அமல்படுத்தினார்.

மின்வெட்டு இல்லாத தமிழகம்: 

2006-2011 ஆம் ஆண்டு வரை  நடைபெற்ற திமுக ஆட்சியில் சென்னையை தவிர்த்து, தமிழகத்தின் பிற பகுதிகளில் மின்வெட்டு பிரச்னை தொடர்கதையாக இருந்தது. தினமும் பல மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீடுகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அன்றாடம் கடும் இன்னலுக்கு ஆளாகினர்கள்.மின்வெட்டு காரணமாக  தங்களது நேர்ந்த தொழில் இழப்புகளை, தொழில் மண்டலமான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள், இன்றும் மறக்கவில்லை என்பதற்கு, 2016ஆம் ஆண்டு நடந்த  சட்டப்பேரவை தேர்தலில், கோவை மண்டலத்தில் திமுக பலத்த அடி வாங்கியதே சாட்சி.

ஆனால், 2011ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா  ஆட்சி பொறுப்பேற்றதும் என்ன மாயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை! இதுநாள்வரை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மின்வெட்டு பிரச்னை இல்லை.

தமிழகம் முழுக்க சிற்றுந்து (மினி பஸ்): 

பேருந்து வசதியில்லாத குக்கிராமங்களில் சிற்றுந்து வசதியை திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான  திமுக அரசு கொண்டு வந்தது. அத்திட்டத்தின்  மறுவடிவமாக, சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள சிறுநகரங்களில்  அரசு நகரப் பேருந்து (டவுன் பஸ்) வசதியில்லாத வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை அம்மையார் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.சிற்றுந்துகள் மூலம் நடுத்தர, ஏழைஎளிய  மக்கள் அன்றாடம் தங்கள் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு குறைந்த பயணச் செலவில் செல்ல முடிகிறது. இதனால் சாமானியர்கள் மத்தியில் இத்திட்டத்துக்கும்  ”சபாஷ்" கிடைத்துள்ளது.

பல்வேறு திட்டங்கள் :

இதேபோல், தொட்டில் குழந்தைத் திட்டம்,  நிலஅபகரிப்பு தடுப்புச் சட்டம், கந்து வட்டி தடுப்புச் சட்டம், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டக திட்டம், கிராமப்புற மக்களுக்காக இலவச கறவை மாடு, இலவச ஆடுகள், கோழிகள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், லேப்டாப் வழங்கினார். 


தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீடு உரிமையை உச்ச நீதிமன்ற தீர்ப்பை, நீதிமன்றம் மூலமாகவே அரசிதழில் வெளியிடச் செய்ததோடு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் உத்தரவையும் ஜெயலலிதா பெற்றுத் தந்தார்.

வீடுகளுக்கு 100 யூனிட் இலவசமாக  மின்சாரம், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது என தனது இறுதி நாட்களில் கூட முதலமைச்சராக பல்வேறு முத்திரை பதிக்கும் திட்டங்கள் அம்மையார் ஜெயலலிதா  ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டன. 


இவ்வாறு நாடே வியந்து பார்க்கும்படி மக்கள் நலத் திட்டங்களை அளித்த அம்மையார் ஜெயலலிதா, இன்று இருந்திருந்தால் தேசிய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக உருவெடுத்திருப்பார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் நம்முடன் இல்லை.

வேங்கை வெற்றி 

No comments

நன்றி | Thank You